Skip to main content

பந்து இப்போது தமிழர்களின் பக்கம் - பேராசிரியர் வி.சூரியநாராயண் பிரத்தியேக நேர்காணல்

-


பேராசிரியர் வி.சூரியநாராயண் இந்தியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகளில் பிரபலமான நிபுணராவார்.  இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் அவர் சென்னை பல்கலைக்கழகத்தின்  தெற்கு மற்று தென்கிழக்கு கற்கைகளுக்கான நிலையத்தில் முதலில் தாபக பணிப்பாளராகவும் பிறகு சிரேஷ்ட பேராசிரியராகவும்  பணியாற்றனார். இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கையில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு பேராசிரியராக இருந்த சூரியநாராயண், இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினராகவும், ஒரு பதவிக்காலத்துக்கு பணியாற்றியிருந்தார்

 

இலங்கையில் தமிழர் பிரச்சினை தொடர்பான விவாதத்தில் அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அந்த திருத்தம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்படவேண்டும் என்றும் மாகாணசபைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சிங்கள பௌத்த தேசியவாதக் குழுக்கள் வலியுறுத்திவருகின்றன. ஒரு வகையில் நிலைவரம் ஈழத்தமிழர்களை  இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கை நோக்கி திரும்ப நிர்ப்பந்தித்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் நேரடி ஈடுபாடு இல்லாமல் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுடியாது என்று பெரும்பாலான ஈழத்தமிழ் அரசியல் அவதானிகள் நம்புகிறார்கள். பல தசாப்தங்களாக இலங்கை நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருபவர் என்ற வகையில் இன்றைய நிலைவரத்தை நீங்கள் எவவாறு நோக்குகிறீர்கள்?

 

புலிகள் செய்ததும் செய்யாததுமான பல காரியங்களினால் பங்கேற்பு ஜனநாயகத்துக்கான தமிழர்களின் போராட்டம் பாரதூரமான பின்னடைவுகளைக் கணடுவிட்டது. இன்றைய உண்மையான நிலைவரம் 1983 க்கு முன்னரான நாட்களுக்கு திரும்பிப்போய்விட்டதுநீங்கள் சொல்வது சரி. சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் 13 வது திருத்தத்தை இல்லாமல்செய்ய விரும்புகிறது. சகல தமிழ் குழுக்களையும் பொறுத்தவரையில், ஒரு மதநம்பிக்கை போன்று விளங்கிவந்த வடக்கு -- கிழக்கு இணைப்பு நீதிமன்றத் தீர்ப்பினால் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது.

மாகாணசபைகள் இல்லாமல் செய்யப்படுமென்று உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. அபிவிருத்தி சபைகளுக்கு அதிகாரப்பரவலாக்கம் அல்ல, அதிகார பன்முகப்படுத்தலே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காக இருக்கக்கூடும்அயல்நாடுகளின் அரசியல் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு இந்தியாவினால் செய்யக்கூடியவற்றுக்கு பாரதூரமான மட்டுப்பாடுகள் இருக்கின்றன. 1987 இந்திய -- இலங்கை உடன்படிக்கையும் அதன் விளைவான 13வது திருத்தமும் புதுடில்லியின் வற்புறுத்தலாலும் நெருக்குதல் கொடுக்கும் தந்திரோபாயங்களினாலும் வந்தவைதூதுவர் ஜே.என்.தீக்சிட்டை அந்த வேளையில் இலங்கையில் இந்தியாவின் வைஸ்ரோய்என்று சிங்களவர்கள் அழைத்தார்கள் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழர்களின் பங்கேற்பும் சிங்களவர்களின் கருத்தொருமிப்பும் இல்லாததால் உடன்படிக்கை முரண்பாடுகளுக்கான காரணியாகியது. அது இரண்டாவது ஜே.வி.பி.கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. வடக்கு, கிழக்கில் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னமே அந்தப்பகுதிகளில் இருந்து இலங்கைப்படைகளை அரசாங்கம் வாபஸ்பெற்று தெற்கில் ஜே.வி.பி.கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு உதவியாயிருந்தது.

புலிகள் இந்தியாவுடன் ஒத்துழைக்கவில்லை. இறுதியில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் மோதல் மூண்டது. தமிழர் விடுதலை கூட்டணி இந்தியாவுடன் ஒத்துழைத்து தேர்தல்களில் போட்டியிட்டு, இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையில் அதிகாரத்துக்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி பின்வாங்கியது. .பி.ஆர்.எல்.எவ்.அதிகாரத்துக்கு வந்தது. ஜனாதிபதி பிரேமதாச புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்குகின்ற அளவுக்கு நிகழ்வுப்போக்குகளில் விரைவான மாற்றங்களைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்தியாவில் அரசாங்கம் மாறியதையடுத்து கொள்கையிலும் மாற்றமேற்பட்டது. இறுதியில் இந்திய அமைதி காக்கும் படை மதிப்பிழந்து இந்தியா திரும்பவேண்டியதாயிற்று. பிரேமதாசவுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான தற்காலிக தேனிலவும் முடிவுக்கு வந்துஇறுதியில் பிரேமதாச புலிகளின் குண்டுக்கு பலியானார். தமிழர் போராட்டம் ஏன் பிழையாகப்போனது என்பது பற்றி தமிழர்கள் மத்தியில் கருத்தூன்றிய விவாதம் நடந்திருக்கிறதா?

 

நான் இந்த கேள்வியைக் கேட்கும்போது தமிழர்கள் தரப்பின்  தவறான நடவடிக்கைகளையும் தடுமாற்றங்களையும் மறுக்கவில்லை. 13வது திருத்தத்தை ஒரு அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதில் தமிழ்த்தேசியவாதிகள் மத்தியில் தயக்கம் இருக்கிறது. முன்னைய அரசாங்கத்துடன் சேர்ந்து புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாடுபட்டது. அந்த நேரத்தில் தாங்கள் இந்தியாவை அணுகினால் சிங்களவர்கள் ஆத்திரமடைவார்கள் என்று கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தன் நினைத்தார். சில சந்தர்ப்பங்களில் அவர் இதை வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்லமுடியும் என்றும் அவர் நம்பினார். இறுதியில் எதுவும் நடக்கவில்லை.

இப்போது கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவின் உதவியை நாடுகிறது. 13வது திருத்தத்தை மாற்றியமைக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நிலையில் இந்தியா இருக்குமா?

 

தமிழ்த்தரப்பின் தவறுகளையும் தடுமாற்றங்களையும் மறுக்கவில்லை" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இது புலிகள் தொடர்பில் சராசரி இலங்கைத்தமிழரின் மனநிலையை பிரதிபலிக்கிறது. புலிகளினால் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை--- முஸ்லிம்களை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து விரட்டியமை, சபாரத்தினம், பத்மநாபா மற்றும் ஏனைய தீவிரவாதக்குழுக்களைச் சேர்ந்த பலரை கொலைசெய்தமை, அமிர்தலிங்கம்நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோரின் கொலை மற்றும் பல செயல்களை  -- தடுமாற்றங்கள்தவறுகள் என்று அழைக்கமுடியுமா?

 

 சம்பந்தனைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டுக்கு அவர் விஜயங்களை மேறகொள்கின்றபோது தி.மு.. அல்லது . தி.மு.. தலைவர்களை அவர் ஒருபோதும் சந்திக்கமுயற்சிக்கவில்லை. இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் இடையிலான இறுக்கமான பகைமையும் ஏதாவதொரு திராவிடக் கட்சிக்கு, சினேகபூர்வமானவராக தான் தென்பட்டுவிடக்கூடாதே என்ற அவரின் அக்கறையுமே அதற்கு காரணமாகும். அவர் சந்திக்கின்ற ஒரே கட்சி பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு பிரிவேயாகும். அவர்  புதுடில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சு அதிகாரிகளையும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் இராஜதந்திரிகளையும் சந்திப்பது வழமை. புதுடில்லியின் கொள்கை மீது சம்பந்தனால் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாக இருந்ததா என்பது சந்தேகமே. புதுடில்லியும் ஒரு மந்திரம் போன்று 13 வது திருத்தத்தை முழுமையாகவும் உறுதியாகவும் நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்று திரும்பத்திரும்பக் கூறிவிட்டு இருந்துவிடும். புதுடில்லி இலங்கையில் அதன் விரல்களைச் சுட்டுக்கொண்டது. இலங்கை அரசாங்கத்துடனான பிணைப்புக்களை வலுப்படுத்துவதே புதுடில்லியின் தற்போதைய மனநிலை.

இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வடிவமைப்பதில் தமிழ்நாடு பிரதான பாத்திரமொன்றை வகிக்கமுடியும் என்று ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினர் இன்னமும் நம்புகிறார்கள். இந்த அடிப்படையில், புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களில் ஒரு பிரிவினர் சீமான் போன்ற அரசியல்வாதிகளுக்கு உதவுகிறார்கள். இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டினால் முக்கியமான பாத்திரமொன்றை வகிக்கமுடியுமா? எனக்கு இதில் சந்தேகம். ஏனென்றால் இதுவரை, அதற்கான சான்று எதுவுமில்லை. எனது கருத்து தவறாகவும் இருக்கலாம். இது விடயத்தில் உங்கள் பார்வை என்ன?

 

தமிழ்நாட்டின் பாத்திரத்தை பொறுத்தவரை, இந்தியாவின் இலங்கைக் கொள்கையின் உருவாக்கத்திலும் நடைமுறைப்படுத்தலிலும் அந்த மாநிலத்தினால், கண்ணியமானதும் ஆக்கபூர்வமானதுமான பாத்திரமொன்றை வகிக்கமுடியும்; வகிக்கவேண்டும். உதாரணத்துக்கு 1964 ஆம் ஆண்டினதும் 1974 ஆம் ஆண்டினதும்  இரு இந்திய -- இலங்கை உடன்படிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த உடன்படிக்கைகள் 1981 அக்டோபர் 31  இரத்துச்செய்யப்பட்டமைக்கு ஓரளவுக்கு காரணம் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் புதுடில்லிக்கு சென்று நடத்திய பேச்சுவார்த்தைகளாகும். அதற்கான பெருமை பெருமளவுக்கு அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் தோமஸ் ஏபிரஹாமுக்கே உரியதாகும். பிரதமர் இந்திரா காந்தியின் மனதை மாற்றியவர் அவரே. எம்.ஜி.இராமச்சந்திரனுடனும் ஏபிரஹாம் பேச்சுக்களை நடத்தினார். பதிலுக்கு இராமச்சந்திரன் சர்வகட்சி தூதுக்குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புதுடில்லி சென்று, உடன்படிக்கைகளை புதுப்பிக்கவேண்டாமென்று இந்திரா காந்தியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாட்டு தமிழர்களுக்காக பெரிதாக குரல் கொடுப்பது யார் என்ற போட்டாபோட்டியின் பின்புலத்தில் மாத்திரமே இரு பெரிய திராவிடக்கட்சிகளினதும் கொள்கைகளையும் செயற்திட்டங்களையும் விளங்கிக்கொள்ள முடியும். அந்த போட்டாபோட்டியில் உண்மையான பிரச்சினை மறக்கப்பட்டு யதார்த்த நிலைவரத்தை விடவும் ஆரவாரப்பேச்சுக்கள் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுவிடும். நான்காவது ஈழப்போரின்போது சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதில் இந்தியாவினால் பெரிய பாத்திரத்தை வகித்திருக்கமுடியும். ஆனால், கருணாநிதியைப் பொறுத்தவரை, தமிழர்களைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் மத்திய அரசாங்கத்தில் தொடர்ந்து  அங்கம் வகிப்பதே கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன் விளைவாக, ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின்படி 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் இறந்தார்கள்.

இரு திராவிடக்கட்சிகளும் முக்கியமானவை. ஆனால், மற்றையவர்களின் பாத்திரம் கணக்கில் எடுக்கக்கூடியதல்ல. தமிழ்நாட்டில் புலிகளின் மிகப்பெரிய ஆதரவாளராக நெடுமாறன் விளங்கினார். ஆனால் பொதுத்தேர்தலில் மதுரையில் அவர் போட்டியிட்டபோது தோல்வியடைந்தார். தமிழ் மக்கள் மத்தியில் எம்ஜி.ஆரின் வசீகரத்துக்கு நெடுமாறன் எந்தவகையிலும் இணையானவரல்ல. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் உள்ளவர்கள் தமிழர்களின் இலட்சியப்போராட்டத்துக்கு சீமான் உதவுவார் என்று நம்புகிறார்கள். அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்றுதான் கூறுவேன்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வு எதுவாக இருக்கும்? தமிழர்கள் ஒரு முடிவக்கு வரவேண்டும். அதற்குப் பிறகு புதுடில்லியினதும் சென்னையினதும் ஆதரவை நாடவேண்டும். பந்து இப்போது தமிழர்களின் பக்கமே இருக்கிறது.

இந்த கேள்வியும் இந்தியாவின் இலங்கைக் கொள்கையுடன் ஓரளவு சம்பந்தப்பட்டதே. பிராமணர்கள் எப்போதுமே ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணமொன்று இருக்கிறது. டில்லியின் வெளியுறவு கொள்கை வகுப்புப் பிரிவிலுள்ள பிராமணர்களே இந்திய வெளியுறவுக்கொள்கை தொடர்ந்து சிங்கள சார்பு போக்கில் இருப்பதற்கு காரணம் என்னும் சந்தேகம் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் அவதானிகள் சிலர் இதை பாரதூரமான ஒன்றாக இன்னமும் கருதுகிறார்கள். பல சூழ்நிலைகளில் இதை நான் அவதானித்திருக்கிறேன். ஆனால், எனது அவதானிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள திராவிட அரசியலின் நடைமுறைகளில் இருந்தே இந்த எண்ணம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகையான கருத்துக்களை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

 

இந்தியாவின் இலங்கைக் கொள்கையின் வில்லன்கள் பிராமணர்களே என்ற கருத்தைப் பொறுத்தரையில், உங்களுக்கு நான் ஒரு விடயத்தைக் கூறுவேன். அதாவது நான் பிறப்பால் ஒரு பிராமணன். தமிழ்ப் பிராமணன் அல்ல. ஆனால் பாலக்காட்டு பிராமணன். எனது பிறப்பு பற்றி உங்களது நண்பர்களுக்கு கூறுங்கள். அதே குற்றத்துக்காக உங்கள் மீதும் குற்றஞ்சாட்டுவார்கள். சாதி என்பது தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பாத்திரத்தை தொடர்ந்து வகித்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் இலங்கைக் கொள்கையை உருவாக்குவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் சாதி எந்த வகையிலும் ஒரு பிரச்சினையே அல்ல. புலிகள் மெச்சிய இந்திரா காந்தி ஒரு காஷ்மீர் பிராமணப் பெண். தனது ஆட்சியில் இந்தியப்படைகளை இலங்கையில் இருந்து திருப்பியழைத்த பிரதமர் வி.பி.சிங் ஒரு பிராமணர் அல்ல.

 

இந்த கேள்வி புவிசார் அரசியல் பற்றியது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பகைமை தமிழர்களுக்கு வாய்ப்புக்களை கொண்டுவரும் என்று  தமிழ்ப் புத்திஜீவிகளில் ஒரு பிரிவினர் நம்புகிறார்கள். ஏதாவதொரு கட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்புவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு தெரிவு இருக்கப்போவதில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

புவிசார் அரசியலைப் பொறுத்தவரையில், சீன --  இந்திய போட்டாபோட்டியையும் தமிழர்களின் பங்கையும் எடுத்துப் பார்ப்போம். எனது கருத்து வித்தியாசமானது. இலங்கை தொடர்பாக நீண்டகாலமாக ஆய்வுகளைச் செய்தவன் என்ற அடிப்படையிலேயே எனது கருத்து அமைந்திருக்கிறது. இந்திய நலன்கள் முக்கியமாக  சம்பந்தப்பட்ட பல விவகாரங்களில் தமிழர்கள் மத்தியில் உள்ள பிரவினர் இந்திய விரோத நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார்கள்.

(1) சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய தமிழர்கள் நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றவர்களாகவும் விடப்பட்டபோது டி.எஸ்.சேனநாயக்கவின் பிரதான ஆலோசகராக இருந்தவர் தமிழ் உயரதிகாரியான சேர் கந்தையா வைத்தியநாதன்.' அவுட்சைட் ஆர்க்கைவ்ஸ்என்ற தனது நூலில் முன்னாள் வெளியுறவுச் செயலாளர்  வை.டி.குந்தேவியா, டி.எஸ்.சேனநாயக்கவை விடவும் சேர் கந்தையா வைத்தியநாதன் கூடுதலான அளவுக்கு சிங்களவர் என்று எழுதியிருக்கிறார். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.

(2) 1956 ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்த பிறகு எஸ்.டபிள்யூ. பண்டாரநாயக்க இலங்கையில் இருந்த தளங்களை வாபஸ் பெறுமாறு பிரிட்டிஷாரைக் கேட்டுக்கொண்டார். அப்போது அதை தமிழரசு கட்சி எதிர்த்தது. நேரு பண்டாரநாயக்கவையே ஆதரித்தார்.

(3) முதலாவது ஈழப்போரின்போது  தமிழ்க் கெரில்லாக்களுக்கு புகலிடமாகவும் ஆதரவுத்தளமாகவும் இருந்தது தமிழநாடேஇந்திய மீனவர்கள் இலங்கை ஆயுதப்படைகளினால் குண்டுவீசப்பட்டும் சுட்டும் கொல்லப்பட்டபோது தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று தலைவர்களும் ஒருபோதுமே அதைக் கண்டிக்கக்கூட இல்லை.

கச்சதீவுப் பிரச்சினை தொடர்பில் பேச்சுக்கள் வரும்போதெல்லாம் இந்த தலைவர்கள்' அது உங்கள் பிரச்சினை' என்று கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இலங்கை மக்கள் மத்தியில் நண்பர்களை வென்றெடுப்பதற்கும் மக்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது தமிழ்ப் பேச்சாளர் இந்தியாவுக்கு சார்பாக பேசினார். நிலைவரங்கள் எவ்வாறு கட்டவிழ்கின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வரலாற்று ரீதியாக  இலங்கையில் வகித்துவந்த முதன்மையான நிலையை இந்தியா இழந்துகொண்டுவருகிறது என்று, மக்கள் மத்தியில் பரவலானதொரு அபிப்பிராயம் நிலவுகிறது. இந்து சமுத்திரத்தில்  சீனாவின் பல்லாயிரம் கோடி டொலர்கள் பெறுமதியான மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில்  பிரதான நாடாக இலங்கை வந்துவிட்டதே இதற்கு காரணம். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தியாவின் இலங்கைக்கொள்கை பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறதா?

 

இந்திய -- சீன பகைகையைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்கு பின்னரான ஆரம்ப வருடங்களில் இலங்கை கம்யூனிஸ்ட் விரோதமானதாக இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் சீனாவுடன் அரிசி -- ரப்பர் உடன்படிக்கையை செய்துகொண்டது. அது இரு நாடுகளுக்குமே பயனுடையதாக இருந்தது. சீனப்பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு உலகில் நடைபெறுகின்ற புரட்சிகரப் போராட்டங்களை அது ஆதரிப்பதில்லை. தற்போதைய சமுதாய அமைப்பைப் பேணுவதற்கே  சீனா விரும்புகிறது. நான்காவது ஈழப்போரின்போது இலங்கைக்கு சீனா பெருமளவு ஆயுதங்களை வழங்கியது. அதனால்  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்தன. இந்தியாவினால் அத்தகைய ஒரு கொள்கையை கடைப்பிடிக்கமுடியவில்லை. ஏனென்றால் அவ்வாறு இந்தியா செய்திருந்தால், அது தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிராகப்போயிருக்கும். இந்தியாவுடன் ஒப்பிடும்போது, இலங்கைக்கு  உதவுவதற்கு சீனாவிடம் பெருமளவு வளங்கள் இருக்கின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் என்று சீனா இலங்கைக்கு பெருமளவில் தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கிறது.

இந்தியா, சீனா, இலங்கை என்று முத்தரப்பு விவகாரத்தை பெரியளவில் சீனாவை கட்டுப்படுத்துவதுஎன்ற உலகளாவிய பின்புலத்திலேயே நோக்கவேண்டும். சீனாவைக் கட்டுப்படுத்தும் அந்த மூலோபாய திட்டத்துக்கு அமெரிக்காவே தலைமை தாங்குகிறது. தனிமைப்பட்ட ஒரு நிலையில் இருந்துவெளியுலகிற்கு தன்னை திறந்துவிடுவதற்கு சீனா கடைப்பிடித்த வெற்றிகரமான கொள்கையின் பின்னணியிலும் இந்த விவகாரங்களை நோக்கவேண்டும்.

 

இறுதியாக, ஈழத் தமிழ் தலைவர்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் ஆலோசனை என்ன?

உங்களுடைய சுவாரஸ்யமான  கேள்விகளில் இலங்கையின் ' மற்றைய தமிழர்கள் ' அதாவது இந்திய தமிழர்கள் அல்லது மலையக தமிழர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது ஏன்? அவர்கள் தோட்டக்காட்டான்கள் அல்லது காட்டுமிராண்டிகள் என்பதனாலா?

தமிழ்பேசும் முஸ்லிம்களைப் பறறியும் நீங்கள் எதையும் கூறவில்லையே. அவர்கள் மொழியின் அடிப்படையில் அல்லாமல், மத அடையாளத்தின் அடிப்படையில் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்த பாடுபடுகிறார்கள்.

பெறுமதி எவ்வளவாக இருந்தாலும் - எனது தாழ்மையான அபிப்பிராயம், மலையகத் தமிழர்களுடனும் முஸ்லிம்களுடனும் ஒன்றுபட்டு கூடுதல் அதிகாரபரவலாக்கம், மொழி, மத உரிமைகளை பாதுகாத்தல், தொழில்வாய்ப்பு உரிமைகள் ஆகியவற்றுக்காக இலங்கை தமிழர்கள் போராடவேண்டும் என்பதே. அவ்வாறு நடக்குமோ என்பது சந்தேகமே. ஆனால் அவ்வாறு நடந்தால் நீதிக்கும் சமத்துவத்துக்குமான உங்களது போராட்டத்துக்கு வெளியுலகத்தின் ஆதரவை நீங்கள் எதிர்பார்க்கமமுடியும்.